×

சித்திரை திருவிழா, 17ல் அழகர் மதுரைக்கு புறப்படுகிறார் : 19ல் ஆற்றில் இறங்குகிறார்

அலங்காநல்லூர்: அழகர்கோவில் சித்திரை திருவிழாவையொட்டி 17ம் தேதி அழகர் மதுரைக்கு புறப்படுகிறார். அழகர்கோவிலின் சித்திரை பெருந்திருவிழா வருகிற 15ம் தேதி தொடங்குகிறது. 17ம் தேதி மாலையில் தங்கப்பல்லக்கில் மதுரையை நோக்கி கள்ளழகர் புறப்படுகிறார். தொடர்ந்து 18ம் தேதி மதுரை மூன்றுமாவடியில் அதிகாலையில் எதிர்சேவை நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் பெருமாள் வைகையாற்றில் தங்கக்குதிரை வாகனத்தில் 19ம் தேதி அதிகாலையில் இறங்குகிறார். 20ம் தேதி வைகை ஆறு தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு மோட்சம் கொடுக்கும் நிகழ்வும், அன்று இரவு தசாவதாரம் நிகழ்ச்சியும் நடைபெறும்.

21ம் தேதி இரவு மன்னர் சேதுபதி மண்டபத்தில் பூப்பல்லக்கு அலங்காரத்தில் அழகர் காட்சி தருவார். அன்று அதிகாலையில் சுவாமி அழகர்மலை நோக்கி செல்வார். 22ம் தேதி இரவு அப்பன்திருப்பதி மண்டபங்களில் கள்ளழகர் கட்சி தருவார். 23ம் தேதி காலை 11 மணிக்கு சுவாமி அழகர்கோவில் சென்று இருப்பிடம் சேருவார்.இதையொட்டி அழகர்கோவிலில் இருந்து மதுரை வண்டியூர் வரை சுமார் 445 மண்டபங்களில் கள்ளழகர் சென்று எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து திரும்புவார்.

உலக அளவில் பிரசித்திபெற்ற இந்த சித்திரை திருவிழாவை காண லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள். அவர்கள் காணிக்கை செலுத்துவதற்கு வசதியாக போலீஸ் பாதுகாப்புடன் 27 உண்டியல்பெட்டிகள் சுவாமி செல்லும் வழியாகவே சென்று கோவிலை வந்தடையும். இதற்காக இக்கோவிலின் திருக்கல்யாண மண்டப வளாகத்தில் உண்டியல்பெட்டிகள் தற்போது தயார்நிலையில் உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து மற்றும் கண்காணிப்பாளர்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Madurai ,Chariwar Festival ,Azhagar , Chithirai festival, Alagar, Madurai
× RELATED முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்த...